Saturday, February 7, 2015

சங்கம்4 : ஏன் இந்தப் பெயர் சூடல்?

கருத்துப் பொருளில் சூல் கொண்டு சொற்களை பிறப்பித்த ஒரே மொழி நானறிய தமிழ் மொழி மட்டும் தான்.

    முதல், இடை, கடை என மூன்று சங்கங்களை வரலாற்றில் தமிழர்கள் அமைத்ததை நாம் அறிவோம். இவை எதோ சில நாட்கள், வாரங்கள் அல்லது மாதங்கள் நடந்த ஓன்றுகூடல்களும் மாநாடுகளும் அல்ல. இவை குறிப்பது ஒரு தமிழ் மறுமலர்ச்சிக் காலவெளி என்பதே எனது புரிதல்.

     தமிழ் மொழியும், தமிழர் கலை-கல்வி-பண்பாட்டு வெளியும், சமூக-அரசியல்-பொருளியல்-சூழல் இருப்பும் இன்று தேய் நிலைக்கும் நெருக்கடியில் உள்ளாகியிருப்பதாக உணரப் படுகிறது. அது உண்மை தான். ஆயினும் முற்றாக அவநம்பிக்கையில் வீழும் அவசியமில்லையென்றே கருதுகிறேன். இப்போதைவிடவும் மிகப்பெரிய நெருக்கடிகளை தமிழ் சந்தித்திருக்கிறது; தமிழர் சந்தித்துள்ளனர்.ஆனால் இன்று நமக்குத் தேவைபடுவது மறுமலர்ச்சி . மீதமிருக்கும் வீரியமுள்ள விதை நெல்களை மீண்டும் விளைநிலங்களில் தூவுவது.

       சங்கம்4 மிக நீண்டதோர் காலக் கட்டத்திற்கான சிறிய தொடக்கம். பிற நகரங்கள், சிற்றூர்கள் வரை தீயாகப் பரவ வேண்டும். பல்துறை அறிவினை அனுபவங்களை உள்வாங்கி தமிழ் ஆனந்தக் களிநடனம் புரியவேண்டியதோர் காலத்திற்கான பள்ளியெழுச்சி முழங்குவதாலேயே சங்கம்4 எனப் பெயரிட்டுள்ளோம்.

    எம்முடன் இணைந்து தமிழுக்கான பள்ளியெழிச்சி பாட சங்கம்4-ற்கு வருவீர் அன்புத் தமிழர்காள்!

சங்கம்4 பெப்ருவரி 13-22, 2015 மிகை கூறேன்!

மிகை கூறேன்!

மிகை கூறல் தமிழர் நமது குறைகளில் ஓன்று. ஆதலால் நீண்டு பல நாட்கள் தீர சிந்தித்த பின்னரே இதனை எழுதுகிறேன். கடந்த பத்து ஆண்டுகளில் உலகின் பல பகுதிகளிலும் நடந்த இயற்றமிழ் நிகழ்வுகள் தொடர்பான விபரங்களையும் இணையத்தில் தேடிப் படித்தேன். சில ஆன்மீகத் தொடர் உரைகளையும்செம்மொழித் தமிழ் மாநாட்டினையும் தவிர்த்தால் உள்ளபடியே உலகின் மிகப் பெரும் இயற்றமிழ் விழா சங்கம்4 தான். மிகைப்படுத்தலின்றிமிக்க பணிவுடனும் பெருமிதத்துடனும் இதனை முழங்குகிறேன்.

அரசின் துணையின்றிஅரசு அமைப்புகளின் துணையின்றிபெரிய நிறுவனங்களின் ஆதரவின்றி மூன்றாம் ஆண்டாய் பெப்ருவரி 13 முதல் 22 வரை பத்து நாட்கள் சங்கம்4தமிழ்த் திருவிழா நடைபெறுகிறதுதமிழ் மொழி மீதான என் தணியாக் காதலும்எனது-நமது இம்மொழி வளர்த்த பண்பாடு மட்டிலான பெருமிதமுமே இடைவிடா என் தமிழ்ச் செயற்பாட்டிற்கான அடியுணர்வுகள்.

நூறு அறிஞர்களை-ஆர்வலர்களை ஒரு அரங்கில் சேர்ப்பது எளிதான காரியமல்ல. இவர்கள் தொழில் முறைப் பேச்சாளர்களும் இல்லை. ஒன்றேல் துறை சார்ந்த அறிவினால் சிறந்தவர்கள்இன்றேல் நீடித்த ஈடுபாட்டினால் வரும் அனுபவ முதிர்ச்சியில் முகிழ்த்தவர்கள். எதிர்காலம் கருதி புது முக இளையர்களையும் அறிமுகப்படுத்துகிறோம். 

சங்கம் 4 ற்கு வாருங்கள். பத்து நாட்களும் பங்கேற்றுப் பாருங்கள்நூறு நல்ல புத்தகங்கள் படித்த நிறைவினை உணர்வீர்கள்.