Thursday, January 30, 2014

சங்கம் - 4 தமிழ்ப் பெரும் திருவிழாவின் 6 ம் நாள்

சங்கம் - 4 தமிழ்ப் பெரும் திருவிழாவின் 6 ம் நாள் கொண்டாட்டங்கள் நேற்று மிகச் சிறப்பாக நடைபெற்றன. தொடக்க நிகழ்வாக இளைஞர்கள், சிறப்பு விருந்தினர்களை உள்ளடக்கிய விவாத அரங்கு நடைபெற்றது. பெருநகர் நாகரீகம் நீடித்து நிலைக்குமா, கிராம வாழ்க்கை கதையாடல் அதீத மிகைப்படுத்தலா, பெருநகரம் பெரிதா , கிராமம் பெரிதா என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. இதில், எழுத்தாளர் முருகேச பாண்டியன், வழக்கறிஞர் சுசீலா, மாற்று வாழ்க்கை மனிதர் இளங்கோ ரெங்கசாமி, நாம் அமைப்பைச் சேர்ந்த தாரை கு.திருஞானம் மற்றும், சூழலியலாளர் ரேவதி ஆகியோர் பங்கு கொண்டு இளைஞர்களோடு விவாதித்தனர்.
விவாதத்தைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு இயற்கை பேராசான் நம்மாழ்வாரின் திருவுருவப்படத் திறப்பு விழா நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.  பின்னர், " வடை போச்சே " - என்ற தலைப்பில் மருத்துவர் கு.சிவராமனின் உரை வீச்சு நடைபெற்றது. இதில் நம் வாழ்வியல் முறைகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் குறித்தும், உணவுப் பழக்க வழக்கங்கள் குறித்தும் விரிவாகப் பேசினார் திரு.சிவராமன். இவரைத் தொடர்ந்து, பட்டிமன்றப் பேச்சாளரும், பேராசிரியருமான, கு.ஞானசம்பந்தன் அவர்கள், " அன்புடை நெஞ்சந்தாம் கலந்தனவே " என்ற தலைப்பில், சங்க இலக்கியங்களில் இடம்பெற்ற காதல், வீரம் குறித்து சான்றுகளோடு, நகைச்சுவையாக விளக்கினார். இவரைத் தொடர்ந்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள், " நாங்கள் வெறுப்பின் கைதிகளில்லை, நம்பிக்கையோடே முன் செல்கிறோம் " என்கின்ற தலைப்பில் சாதி, மத பேதங்களால் ஏற்படுத்தப்படும் வெறுப்பு அரசியல் குறித்தும், உலகமயமாக்கல் குறித்தும் விரிவாகப் பேசினார். விவாதத்தில் தொடங்கி நிகழ்ச்சியின் இறுதி வரை அத்துனை நிகழ்ச்சிகளையும் திரு.விஜயன் மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்து தொகுத்து வழங்கினார். விழா ஏற்பாடுகளை நாம் அமைப்பினரும், தமிழ் மையம் அமைப்பைச் சேர்ந்தவர்களும் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment