Tuesday, January 28, 2014

சங்கம் 4 - தமிழ்த் திருவிழா மூன்றாம் நாள் நிகழ்வுகள்

சங்கம் 4 தமிழ்த் திருவிழாவின் மூன்றாம் நாள் நிகழ்ச்சிகள் நேற்று மிகச் சிறப்பாக நடந்தேறின. மாலை 4 மணிக்குத் தொடங்கிய விவாத அமர்வில் பாரம்பரிய நிலத்தின் பண்பாட்டு வேர்களிலிருந்து சிறுபான்மைச் சமூகங்கள் விலகி அன்னியப் படுகின்றனவா ? என்ற பொருளின் கீழ் சிறப்பானதொரு விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் , சமூக செயற்பாட்டாளர்கள் ஆளூர் ஷாநவாஸ், வீரபாண்டியன், நக்கீரன் பத்திரிகையின் துணை ஆசிரியர் கோ.வி.லெனின், எழுத்தாளர் மார்க் ஸ்டீபன், வழக்கறிஞர் வசந்த ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்விற்குப் பின் மாலை சரியாக 6 மணிக்கு தமிழறிஞர்கள் பங்கு பெற்ற பேரமர்வு நடைபெற்றது. இதில் தனிநாயகம் அடிகளார் குறித்து மூத்த தமிழரிஞர் திரு.ஒளவை நடராசன் அவர்களும், பண்பாட்டு வேர்களில் இருந்து பிறக்கட்டும் புதுயுகத் தமிழினத்தின் விடுதலை விழுமியங்கள் என்ற தளத்தில், பேராசிரியர் .நெடுஞ்செழியனும் உரையாற்றினார்கள். உலகப் பரப்பில் தமிழ் என்ற தலைப்பில் கனடா வாழ் தமிழறிஞரான தங்கவேல் நக்கீரனார் அவர்கள் எழுதிய உரையை அருட்தந்தை ஜெகத் கஸ்பர் அவர்கள் வாசித்தார். இன்று மாலை 4 மணிக்குத் தொடங்கும் விழாவில் தொடக்க நிகழ்வாக கல்லூரி மாணவ, மாணவியரோடு சிறப்பு விருந்தினர்கள் பங்குபெறும் விவாத அமர்வும், அதைத் தொடர்ந்து, நாட்டுப்புறவியலாளர் திரு.முத்துக்குமாரசாமி , அக்குபஞ்சர் விரிவுரையாளர் உமர் பரூக், பேராசிரியர் அப்துல் காதர் ஆகியோர் பல்வேறு தலைப்புக்களில் உரையாற்ற இருக்கிறார்கள். தமிழ் குறித்தும், தமிழ்ச் சமூகம் குறித்தும் அறியப்படாத பல்வேறு தகவல்களை இந்நிகழ்வின் மூலம் பெறமுடிகிறது என்று விழாவில் பங்கேற்றவர்கள் மகிழ்வுடன் தெரிவித்தனர். விழா ஏற்பாடுகளை நாம் அமைப்பினரும், தமிழ் மையம் அமைப்பினரும் சிறப்பாக செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment