Tuesday, January 28, 2014

சங்கம் 4 - தமிழ்த் திருவிழா நான்காம் நாள் நிகழ்வுகள்

தமிழ் மையம் மற்றும் நாம் அமைப்பினர் இணைந்து சென்னையில் நடத்தி வரும் சங்கம் - 4 தமிழ்த் திருவிழாவின் 4 ம் நாள் நிகழ்வுகள் நேற்று சென்னையில் உள்ள சி.எஸ்.ஐ.தலைமைச்செயலகத்தில் நடைபெற்றன. நிகழ்வின் தொடக்கமாக, கல்லூரி மாணவ, மாணவியர்கள், சிறப்பு விருந்தினர்களுடன் நடத்திய விவாத மேடை அரங்கேறியது. சாதி, மதம், மொழி, தேசம், மனிதம் எது நம் அடையாளம் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில், சமூக ஆர்வலர் ஓவியா, எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன், எழுத்தாளர் அ.முத்துகிருஷ்ணன், அருட்தந்தை.ஜெகத் கஸ்பர் உள்ளிட்டோர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு இளைஞர்களோடு விவாதித்தனர். விவாத அரங்கைத் தொடர்ந்து, மருத்துவத்தில் அரசியல் என்கின்ற தலைப்பில் அக்குபஞ்சர் விரிவுரையாளர் உமர் பரூக்கின் சிறப்பானதொரு உரை நடைபெற்றது. தொடர்ந்து, பேராசிரியர் அப்துல் காதர் அவர்கள், மணி நீரே, மண்ணே, மலையே, அலை கடலே, அணி நிழற் காடே என்ற தலைப்பில் இயற்கை குறித்து விரிவான உரையாற்றினார்.
இவரைத்தொடர்ந்து, மருத்துவர் மு.செம்மல் அவர்கள் திருவருட்பா மூலம் அறிவியல் கற்போம் என்ற தளத்தில் உரை நிகழ்த்தினார். 

சங்கம் - 4 ன் ஐந்தாம் நாள் நிகழ்வுகள் இன்று மாலை சரியாக 4 மணிக்குத் தொடங்குகின்றன. நிகழ்வின் தொடக்கமாக, தமிழுணர்வு, பண்பாடு, மரபுகள், உணவு, இவற்றை இன்றைய இளைய தலைமுறையினர் வலிந்து சுமக்கத்தான் வேண்டுமா என்ற தளத்தில் விவாதம் நடைபெறுகிறது. தொடர்ந்து, ஒரு விதையின் மரணம், ஆழ்கடலும் ஆண்டு கடந்தோம், பட்டிமன்றப் பயணம் - சாதி மதம் கடந்த என் மானுடத் தரிசனங்கள் ஆகிய தலைப்புகளில் முறையே சூழலியலார் காளிதாஸ், கடல் ஆய்வாளர் ஒரிசா பாலு, பட்டிமன்றப் பேச்சாளர் ராஜா ஆகியோர் உரையாற்றுகின்றனர். தமிழ்த் தேன் பருக அனைவரும் வருக..

No comments:

Post a Comment